Sunday 24 September 2023

திலீபம்..


சொட்டுச் சொட்டாய் சொட்டி 
காய்கிறது உயிர்ச் சொட்டு 
உறுதியோ 
சொட்டும் வற்றவில்லை 

கற்றாளை கடைசியாய் 
கைபிடித்து வைத்திருக்கும் 
நீர்ச் சொட்டை 
வேருக்கு விடுதல் போல
செயல் குறைந்து செல்லும் 
செல்கள் ஒவ்வொன்றும் 
இறுதிச் சொட்டை 
சோர்ந்த கலங்களின் வாயில் 
சொட்டுகிறது 

உடற் தினவு குறைந்தாலும் 
உயிர்த் தினவு குறையவில்லை 

காற்றைக் கிழித்து வரும்
சன்னம் 
சதையில் கொழுவும் போழ்து 
குளிருமாம், அவர்
வாதையை உணரத் தலைப்படுமுன்
வரலாறு அவரை 
மாவீரரென எழுதிவிடும் 

இஃது அஃதல்ல 

ஒவ்வொரு கலங்கலமாய் கருகிவிழ
விடுதலைக்காய் 
ஐம்பொறியின் உயிர்த் தொடர்பை
உடலினின்று பிரித்தெடுத்து 
தேச விடிவென்ற திசையில் 
மனங் குவித்து 
திண்மைமிகு மனசின் 
தீரத்தால் உடல்வலியை 
கணங்கணமும் தாங்கி 
எரிந்திடுதல்

காந்திமுக அரசியலில் 
சாந்தியிலை தமிழின
சங்காரமே உண்டென 
சத்திய வேள்வியில் 
தன்னை எரித்தான்  

கை, கால்கள் சோர்கையிலும்
மெய் நோக்கம் சோரவில்லை 

குரலுடைந்து போகையிலும்
மனதுடைந்து போகவில்லை 

உடல் சோர்ந்து விழுகையிலும்
உயிர்க் கனவு சோரவில்லை

நினைவறுந்து போனாலும் 
நிலையறுந்து போகவில்லை 

வயிற்றில் இட்ட தீ
வளரும், தமிழ்த் தாகம்
தீரும் வரை அந்தத்
தீயெரியும், அதனொளியில் 
வழிநடப்போர் நடக்க
வழி புலரும் 
மலரும்.. 


Tuesday 22 August 2023

கவனி..

எதிர்பாராக் கணமொன்றில்
கதவு மூடும் 
எவ்வளவு தான் முயன்றும்
இனித் திறக்க வாய்ப்பில்லை 
வெளிப்பூட்டு, கனத்த கதவு 

கவனம் முழுதும் 
கதவிலேயே இருந்தது 
உதைந்தும், தோளால் இடித்தும் 
ஓர் அசைவும் இல்லை 

வெளிவர இனி வாய்ப்பற்று 
வழி மூடிப் போனதாய் 
வாடிப் போனாய்

கதவையே பார்த்துக் கொண்டிருந்தால் 
காலம் தான் ஓடும்

கைக்கெட்டும் தூரத்தில் 
சன்னலும் உண்டு கவனித்தாயா 
எழுந்து திற 
சில்லென முகத்தில் காற்றடிக்கும் 
வெளிவர இதுவும் வழிதான் 

இதையும் கூட அடித்து மூடலாம் 

கதவும், சன்னலும் அடைத்தாலென்ன 
கண்ணைத் திருப்பு, கவனி 
இருக்கிறது 
இன்னும் நிறைய வழிகள் 

Saturday 12 August 2023

அந்தக் கண்கள்..

அதிகாலையில் மெதுமெதுவாய் 
சந்திரன் மறைவதைப் போல் 
நினைவுகளின் பிடியில் இருந்து 
பழகிய முகம் நழுவுகிறது
ஆனாலும் 
அந்தக் கண்கள் இன்னமும் 
ஒளி உமிழ்ந்து கொண்டிருக்கிறது 
விடிவெள்ளியைப் போல 

உருவமெனும் ஓவியத்தின் கோடுகள்
தூரத்தே தெரியும் 
வற்றிப் போன நதியின் 
மங்கும் தடமாய் 
ஒவ்வொன்றாகக் கரைந்து 
கால அருவியில் வீழ்ந்து மாய்கிறது
ஆயினும்  
பாடலின் வார்த்தைகள் மறந்தாலும்
மனதிற் பதிந்த இசையை  
முணுமுணுக்கும் தொண்டை போல  
அந்தக் கண்கள் மட்டும் 
ஒளிர்ந்து வழிகிறது

நூற்றாண்டுகளின் முன் 
வரையப்பட்ட 
அழகொழுகும் பெண்ணின்
ஓவியத்தில் இருந்த 
வண்ணங்கள் மங்கிப் போனாலும் 
கண்கள் இன்னமும் 
பார்க்கும் கண்களை விடாமல் 
தொடர்ந்து பார்ப்பதைப் போல்  
யாருமற்ற இரவுக் கடலை
கட்டி அணைக்கும் 
குளிர்ந்த நிலவொளியாய் 
இன்னும் அந்தக் கண்கள்

நினைவெனும் நிழற்படக் 
கோப்பின்மேல் விழுகிறது 
காலத்தின் மூடுபனி, 
பூவில் இருந்து இயல்பாய் 
இதழ் அவிழ்வதைப் போல்
கடந்து செல்கிறது இளமை
வா என அழைக்கும்
இமைக்கரங்களின் சிமிட்டலில் 
கரைந்து விழிச் சமுத்திரத்தில் 
வீழ்ந்தவர் என்றும் கரையேறுவதில்லை 

ஒளியாண்டுகளைக் கடந்து 
கண்களை எட்டும் 
விண்மீனின் பயணக் காலத்துள் 
பண்டைய பிரபஞ்சத்தின் 
வாழ்வும் கதையும் 
மறைந்திருப்பதைப் போல 
கண்மணிகளுக்குள் நிறையக்
கதைகள் 

பார்த்தவர் விலகிப் போனாலும்
பார்வை விலகுவதில்லை 
 

Saturday 29 July 2023

நித்திய நிலவு..

விடியலின் முதல் ஒளியை 
முத்தமிட்ட மலரிதழில் இருந்து 
மெதுவாய் அவிழ்ந்துருளும்
நீர்த்துளியின் அழகிய காட்சியாய் 
தென்னை இளம்பாளைச் சிரிப்போடு 
உன் முகம் எனக்கின்னும் 
நினைவிருக்கிறது

பழகும் காலத்தில் 
எம்மைத் தாண்டிச் சென்ற 
ஏதோ ஒரு வாசனை  
எதிர்பாராமல் இன்று 
நாசியில் படுகிறபோது 
கடந்த காலம் 
விம்மியபடி விம்பமாய் 
முன்னே எழுகிறது
களத்தில் கேட்ட கானங்களை
புலத்தில் கேட்கிற போது 
காட்டு மணம் அறைமுழுதும்
நிறைவதில்லையா 

அன்றொரு மாலை 
கால் நனைக்கவுமென 
கடற்கரை போயிருந்த போதில் 
குருதிச் சிவப்பாய் 
கடலுள் சூரியன் இறங்கும் கணங்களில் 
கடந்து கொண்டிருந்த படகும் 
பறந்து கொண்டிருந்த பறவையும் 
சூரிய வட்டத்துள் பொருந்திவிட 
உலகின் அந்த அழகிய காட்சியில் 
நாமெம்மை மறந்து 
கைகளை இறுகப் பிணைத்தோம் 

அட்லாண்டிக் கடற்கரையில் 
அப்படி ஒரு காட்சியை  
இன்றைய நாளில் 
காண நேர்ந்த பொழுது 
காற்றில் பிசைந்த கையில் 
என்றோ பிணைத்த கையின் 
கணச்சூடு 

கடலும் மலையும், பாம்பாக
இடையில் நீண்டு கிடந்தாலும்
இங்கிருந்து நான் பார்க்கும்
அதே விண்மீனைத் தான் 
அங்கிருந்து நீயும் காண்கிறாய் 
மனவான் ஒன்று தான் 
அதில் மின்னியபடி 
எண்ணற்ற நினைவுகளும்
அன்பெனும் நித்திய சந்திரனும்..


Saturday 22 July 2023

பிரசவம்

வெப்பக் காற்றுக்கு 
ஈர முத்தம் கொடுத்தபடி 
சாளரத்தால் 
சாரலடிக்கிறது மழை
கவிதையொன்று வர எத்தனிக்கிறது போல
வந்தால் சுகம்
அமுத நிலை வடியும் 
வராவிட்டால் 
அதைவிடச் சுகம் 
அமுத நிலை ஊறும்.. 

நினைவின் துமி..

அரைத்தூக்கத்தில் புரள்கின்ற 
ஆழ்அமைதி இரவில் 
தூரத்தில்  எங்கோ கேட்கின்ற 
ஒற்றைப் பறவையின் குரலுக்கு 
திடுக்குற்றுப் பார்க்கிறது 
மனசு, 

உறவி ஊர்ந்தூர்ந்து 
உண்டான தடமாய் 
மனப்பாறைமேல் 
நினைவுகள் 
ஊர்ந்த தடங்கள் 
இன்னும் அப்படியே  சுவடுகளாய், 

உதட்டைப் பிரிக்காமல் 
வாய் சிரிக்கிறது 
ஏனோ நீரூறி 
கண்கள் துமிக்கிறது..

அளவு..

அளவோடென்பது அன்புக்குமாகும் 
அலை கரையைத் தழுவல் அளவு, 
தாண்டிவிடல்
இழவு, இம்சை, இருக்கேலா வருத்தமென 
இளக்காரமாகும் உன்னிருப்பு 
ஆதலினால்
அளவோடென்பது அன்புக்குமாகும்..